புதிய பதிவுகள்

Tuesday, October 16, 2012

டெங்கு காய்ச்சல் குணமாக



டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
ஒரு தடிக் குச்சியினால் ஓங்கி ஓங்கி அடிக்கப்படுவது போன்ற அளவிற்குத் தீவிரமான வலி எலும்புகளிலும், கீல்களிலும் திடீரென்று ஏற்பட்டு வரும் காய்ச்சல் டெங்கு. சிலருக்கு காய்ச்சல் வாயு தோஷத்தினால் குளிர் நடுக்கத்துடன் தொடங்கும். அதனுடன் பித்த தோஷமும் சேர்ந்தால் சிறிது பிதற்றல் புலம்பலுடன் இருக்கும். ரத்தத்தின் கொதிப்பு அதிகமானால் காய்ச்சல் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று நாட்களில் உடல் பூராவும் சிறு கடுகு போன்ற சிவந்த தடிப்புகள் அம்மை போல் கண்டு அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் மறைந்து போகும். ரத்தம் மற்றும் பித்தத்தில் விசேஷக் கெடுதல் ஏற்படாத மனிதர்களுக்கு இந்த அம்மை போன்ற சிவப்புத் தடிப்பு உண்டாவதில்லை. சிலருக்கு வயிற்றில் பித்தம் கெடுதலைச் செய்து உமட்டல், வாந்தியை உண்டாக்குகிறது.

கபதோஷத்தின் சீற்றத்தால் தொண்டைப்புண், கண்களில் வலி, இருமல், மூக்குச் சளி, தலைகனம் இவையும் பூட்டுகளில் உடல் பூராவும் விட்டுவிட்டு வலியும் வீக்கமும் சிலருக்குக் காணும். இரண்டு மூன்று நான்கு நாள்கள் வரையில் காய்ச்சல் அடித்துவிட்டு காய்ச்சல் மட்டும் திடீரென்று தணியும். தணியும் போது சிலருக்கு வியர்வை அதிகம் ஏற்படும். பேதியும் 3-4 தரம் சிலருக்கு ஏற்படும். காய்ச்சல் தணிந்தாலும் தடியடி போன்ற உடல் கை, கால் பகுதிகளில் வலி மட்டும் குறைவதில்லை. திரும்பவும் காய்ச்சல் தீவிரமாகவும் அதிக வலியுடனும் ஏற்படும். ஆனால் மொத்தம் 8 நாள்களுக்கு மேல் பொதுவாக இந்தக் காய்ச்சல் நீடிப்பதில்லை. காய்ச்சல் விட்டாலும் கை, கால் விரல் ஸந்தி முதல் பெரிய எலும்புகள் அதன் பூட்டுகளில் எல்லாம் வலி மட்டும் சிலருக்கு நாள் கணக்காய், வாரம் அல்லது மாசக்கணக்காய் கூட நீடிக்கும்.

தடி போட்டு அடிப்பது போல் எலும்புகளில் வலி இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு ‘தண்டக காய்ச்சல்‘ என்று ஆயுர்வேதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

பழைய கால ஆயுர்வேதப் புத்தகங்களில் டெங்கு காய்ச்சல் பற்றி விவரிக்கப்படவில்லை. அதனால் ஆயுர்வேத மருத்துவர்களால் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கூற முடியாது என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. புதிது புதிதாக வரும் எந்தவிதமான நோய்க்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை சிறந்த முறையில் தாராளமாய் செய்ய முடியும். சூரியனின் பிரகாசம் போல் என்றும் மாற முடியாத வாயு பித்தம் கபம் ஆகிய திரிதோஷ தத்துவங்களை வைத்துக்கொண்டு புதிய நோய்களைச் சிரமமின்றிக் குணம் செய்யலாம்.

வாதமும் கபமும் சீற்றமடைந்து ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சலில் கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, சுக்கு, வெண்கோஷ்டம் இவற்றைக் கொண்டு கஷாயம் முறைப்படி செய்து தினம் 3-4 வேளை சாப்பிடலாம். மருந்துகள் வகைக்கு 5 கிராம், 160 மிலி. தண்ணீர் விட்டு, 50 மிலி. குறுக்கிச் சாப்பிட விரைவில் காய்ச்சல், உடல் வலி நீங்கும்.
தேவதாரு, பர்ப்பாடகம், சிறுதேக்கு, கோரைக் கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி விதை, கடுக்காய், சுக்கு, ஓமம், திப்பிலி இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயமும் சாப்பிடலாம்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் தசமூல கஷாயம் சாப்பிட மிகவும் நல்லது.

பித்த தோஷத்தின் சேர்க்கையினால் அம்மைபோல் சிவப்பு தடிப்பு முதலியன இருந்தால் நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிகமதுரம், விலாமிச்சம் வேர் கஷாயம் நல்ல குணம் தரும்.

கபத்தின் தொந்தரவால் இருமல், நெஞ்சுக்கட்டு, ஜலதோஷம் இருந்தால் மகாதான்வந்திரம் அல்லது வாயு குளிகை ஒன்றை தேன் குழைத்து கஷாயத்துடன் சாப்பிட விரைவில் காய்ச்சல், வலி குறையும். காய்ச்சல் விட்ட பிறகு உடனேயே புஷ்டி பலம், ரத்த அணுக்கள் வளர அசுவகந்தாதி சூரணம், தசமூலாரிஷ்டம், அசுவகந்தாரிஷ்டம் போன்ற மருந்துகளைச் சாப்பிடுவது நன்மையாகும்.

No comments:

Post a Comment