புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் என்ன? தீர்வுகள் என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.V.ஆவுடேஸ்வரி,


ஆங்கில மருத்துவமானாலும் மாற்றுமருத்துவ முறைகள் என்றாலும் ஆண்களின் செக்ஸ் நலப் பிரச்சனைகளைக் கவனிக்கும் அளவுக்கு பெண்களின் செக்ஸ் நலப் பிரச்சினைகளைக் கவனிக்கவில்லை.

இனிய இல்லற வாழ்விற்கு பாலியல் அறிவு அடிப்படையானது. மனித வாழ்வை இயங்கச் செய்வதும் இயக்கி வைப்பதும் 'லிபிடோ' எனும் பாலின்ப வேட்கையே என்று உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டு சுட்டிக் காட்டுகிறார். இந்த (லிபிடோ) அடிப்படை உணர்வு பெண்ணுக்கு ஏற்படாமல் போனால், பாலியல் விருப்பமே ஏற்படாமல் அல்லது மிகமிகக் குறைவான விருப்பம் மட்டுமே இருக்குமானால் அதனை HYPOACTIVE SEXUAL DISORDER என்றழைக்கின்றனர். 'செக்ஸ்' மீது வெறுப்புணர்ச்சி மனதில் ஏற்பட்டிருக்குமானால் அதனை SEXUAL AVERSION DISORDER என்றழைக்கின்றனர்.

லிபிடோ குறைபாடும், செக்ஸ் குறித்த வெறுப்பும் அமைந்துள்ள பெண்ணின் மணவாழ்க்கை மயான வாழ்க்கையே. தாம்பத்தியம் எனும் இனிய சங்கீதம் இசைக்க முடியாது.

சில பெண்களுக்கு மனதில் பாலுணர்வுச் சிந்தனைகளும் விருப்பமும் நிறைந்திருக்கும். ஆனால் உடலில் உரிய ரசாயன மாற்றங்கள் நிகழாது. ஆண்களிடம் காணப்படும் ERECTYLE DISORDER  எனப்படும் விறைப்பு பிரச்சினை போல பெண்களிடம் இனப்பெருக்க உறுப்பில் உறவுக்கு முந்திய கிளர்ச்சிநிலை, சுரப்புநீர் (LUBRICATIONG FLUID) தோன்றாமல் பிரச்சினைகள் ஏற்படும்.

சில பெண்களுக்கு பிறப்புறுப்பு தசைகள் இறுக்கமடைந்து விட்டுவிட்டு வலி ஏற்படும். இதனை VAGINISMUS என்பார்கள். இதனால் உடலுறவு என்ற இனிய அனுபவத்திற்கு மாறாக கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும்.

கல்வியும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளரும் போது உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது. இதில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. அதீதமான கட்டுப்பாடுகளை மட்டுமே அனுபவித்த இந்தியப் பெண்ணினம் மேற்கத்திய சுதந்திரமான பெண் வாழ்க்கையை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவும், இதர கலாச்சார சீர்க்கேடுகளாலும் சில பெண்களின் செக்ஸ் வாழ்க்கை தவறான பாதைகளிலும் செல்கிறது. ஓரினச் சேர்க்கை (LESBIANISM), சுய இன்ப அடிமைத்தனம் (MASTURBATION ADDICTION) போன்றவை அதிகரித்து வருகிறது. இவை பெண்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக் கூடியவை. இத்தகைய பெண்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டுதல், சிகிச்சை வழங்கினால் நிச்சயம் மீள முடியும்.

பெண்களின் அனைத்துப் பாலியல் நலப் பிரச்சினைகளையும், ஹோமியோபதி, பாச் மலர் மருத்துவம், அக்குபஞ்சர் போன்ற இயற்கை முறைச்சிகிச்சைகளில் பக்கவிளைவுகளின்றித் தீர்த்துக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட பெண்களின் உளவியல் ரீதியான, உடல் ரீதியான தனித்தன்மைகளையும், மொத்த அறிகுறிகளையும் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவதால் எத்தகைய பாலியல் சிக்கல்களுக்கும் எளிய முறையில் தீர்வுகள் கிடைக்கின்றன.

ஹோமியோபதி எனும் பிரமாண்டமான மருத்துவ சமுத்திரத்தில் ஆண், பெண் பாலியல் நலப் பிரச்சினைகளைத் தீர்த்து நலமளிக்கக் கூடிய மருந்துகள் மட்டும் 200-க்கும் மேல் உள்ளன. 38 விதமான மலர் மருந்துகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்களின் கண்ணீரைத் துடைத்து இன்பமயமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய மருந்துகள் இவை.


சிகிச்சை பெற தொடர்பு கொள்க:
Dr.S.வெங்கடாசலம் & Dr.V.ஆவுடேஸ்வரி,
தீபம் மாற்றுமுறை மருத்துவமனை,
29/9A பழைய டிரங்க் ரோடு,
சாத்தூர் - 626203.
தொடர்பு: 9443145700.
Althopp@gmail.com

அழகே உன் முகவரி என்ன?



கட்டுரை ஆசிரியர்: Dr.S.வெங்கடாசலம்,


குழந்தை அம்மாவிடம் கேட்கிறாள்வானத்தில் ஏனம்மா இத்தனை நட்சத்திரங்கள்?அம்மா சற்று யோசித்து விட்டு இருட்டாய் இருந்தால் அழகாய் இருக்காது. அதனால் தான் இவ்வளவு நட்சத்திரங்கள் வெளிச்சமாய் மின்னுகின்றன என்றாள். இல்லையம்மா? இரவையும் இருட்டையும் அழகாய் இல்லை என்று ஏன் சொல்கிறாய்? இருட்டில் நடக்கும், கொலை, கொள்ளை, தவறுகள் தானே அசிங்கமானவை? அதைக் கவனிப்பதற்காகத் தான்...... இரவு நேரங்களில் யார் யாரெல்லாம் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இறைவன் இத்தனை கண்களால் வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாள் குழந்தை. எதிர்பாராத அருமையான இந்தப் பதிலைக் கேட்டு அன்னையின் மனதில் ஆயிரமாயிரமாய் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்தன.

குழந்தைகள் விளக்கம் யாரோ சொல்லி நெஞ்சில் பதிந்த கருத்தாக இருக்கலாம். அதைப் பிஞ்சு உதடுகள் மென்மையான சங்கீதக் குரலில் உச்சரிக்கும் போது வசீகரம் அதிகரிக்கிறது. எல்லாக் குழந்தைகளுமே அழகானவர்கள்தான். குழந்தைகள் உதிர்க்கும் மழலைச் சொற்கள் எல்லாமே மொழி இலக்கணம் மீறிய அழகுகள் தான். ஒவ்வொரு தாய்க்கும் தான் சுமந்து பெற்ற பிள்ளையே அழகான பிள்ளை. ஒவ்வொரு பிள்ளைக்கும்.
 
தெருவுக்குத் தெரு காளான்கள் போல் அழகுநிலையங்கள் தோன்றி வருகின்றன. அங்கே எதை அழகுபடுத்துகிறீர்கள்? அழகு விலைக்குக் கிடைக்குமா? எது அழகு? சிவந்த மேனியா? வட்ட முகமா? பவுடர், கிரீம், லிப்ஸ்டிக் பூச்சுக்களா? சுருள் முடியா? வாட்டசாட்டமான உருவமா?
சுட்டெரிக்கும் சூரிய வெயிலை முதுகில் சுமந்தபடி உழைக்கும் பலகோடி ஆண், பெண் உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. அவர்களின் அன்றாட ஆடைகளில் படிந்துள்ள வியர்வைக் கறையும், அழுக்கும், தூசியும்..... உழைப்பின் அடையாளங்கள். கருப்பு நிறமும் கறைபடிந்த ஆடைகளும் அவலட்சணங்களா?
மகாத்மா காந்தியின் பொக்கைவாய்ச் சிரிப்புப் படம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இல்லத்திலும் வீற்றிருப்பதற்கு என்ன காரணம்? அவர் அழகானவர் என்பதாலா? மிகச் சிறந்த மனிதர்கள் நெல்சன் மண்டேலா முதல் காமராஜர் வரை நிறம் கடந்து நேசிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அழகு என்பது நிறத்தோடும் புறத்தோற்றத்தோடும் மட்டும் சம்பந்தபட்டது என்று எண்ணி மருகுவது பேதைமையல்லவா? 
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சிறிதும் பெரிதுமாய் எண்ணற்ற அழகுகள் நிறைந்திருக்கிள்றன. அன்பு, அறிவு, உழைப்பு, நேர்மை, மனிதநேயம் இவைதானே மிகச்சிறந்த அழகுகள். அழகு குறித்த போதைத்தனமான, பேதைத்தனமான பிரமைகளால் தடுமாறுவோர் அழகு நிலையங்களும், அழகு சாதனங்களுக்கும் பணம் செலவிடுவது போல, மனதை அழகுபடுத்தும், ஆரோக்கியப்படுத்தும் நூல்களுக்கு செலவிடுவதில்லை.

புற அழகில் அதிக நாட்டமுள்ளவர்களில் ஒருபகுதியினர் தங்களைத் தாங்களே அருவருத்து, வெறுத்துக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது. முகத்தில் வெடித்துள்ள இரண்டு பருக்களும், காதோரத்து மருவும், முன்கையில் உள்ள சிறுமச்சமும், நகத்திலுள்ள வெண்புள்ளியும் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறிவிடுகின்றன. மற்றொரு பகுதியினருக்கு நோயாளிகளைக் கண்டால் மருத்துவமனைகளைக் கண்டால் மனதிற்கு அலர்ஜி. அருகில் நெருங்கமாட்டார்கள். சுத்தத்திற்கு பிறகுதான் அன்பு, நட்பு, உறவு எல்லாம்! சுத்தப்படுத்துகிறோம் என்று பலமுறை கைகளை,கால்களைக் கழுவும் இவர்களின் மனம் எவ்வளவு அழுக்காக இருந்தாலம் கவலைப்படமாட்டார்கள்.கிருமிகளுக்கும், நோய்களுக்கும் மிகவம் பயப்படுவார்கள். இத்தகையவர்களின் மட்டுமீறிய அருவருப்பு மற்றும் வெறுப்பு உணர்ச்சிகளை மாற்றி மனங்களைச் சுத்தப்படுத்த உதவும் மலர் மருந்து கிராப் ஆப்பிள் (CRAB APPLE) . 

 கிராப் ஆப்பிள் மருந்திற்குரியவர்கள் உடம்பில் எங்கேனும் ஓரிடத்தில் அசுத்தமோ, அழுக்கோ, நிறமாற்றமோ, புண்ணோ, வலியோ.... எது காணப்பட்டாலும் அந்த பாகத்தையே வெட்டி எறிந்து விட வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சுவரில் தொங்கும் போட்டோ அல்லது காலண்டர் சற்று சாய்ந்திருந்தாலும் அவர்களின் மன அமைதி குலைந்து விடும். அந்த நிலைமையில் அவர்கள் வேறெந்தச் செயலிலும் மனதைச் செலுத்த முடியாது.

தீவிரமான சுத்தவாதிகளாய் திகழும் கிராப் ஆப்பிள் நபர்கள் அடித்தட்டு மக்களைப் பார்த்து அருவருப்பு அடைவதுண்டு. ஏழை, எளிய பாட்டாளி மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், வசிப்பிடம் எல்லாமே அருவருப்பு ஏற்படுத்தும். கிராப் ஆப்பிள் பேர்வழிகள் தங்கள் அழகையும், அந்தஸ்தையும் பராமரிக்கும் வழிமுறைகள் எல்லாம் ஆடம்பரமானவையாகவே இருக்கும். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆடம்பரமான நட்சத்திர விடுதிகள், ஆடம்பரமான உணவகங்கள், ஆடம்பரமான ஜவுளிக்கடைகள், ஆடம்பரமான காலணிக் கடைகள் போன்றவற்றையே விரும்பி நாடுவார்கள். இவர்களின் மனநிலையைச் சுத்திகரிக்க கிராப் ஆப்பிள் தேவை.

கலெக்டர் அலுவலகத்தில பணியாற்றும் ஒரு பெண்மணி அடிக்கடி வாந்தி, குமட்டல் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். பலவித சிகிச்சைகளும் நிவாரணமளிக்கவில்லை. அவரை முழுமையாக விசாரித்தோம். அவர் பணியாற்றும் அலுவலக அறையில் மராமத்து வேலைகள் நடப்பதால் வேறொரு அறைக்கு அலுவலகத்தை மாற்றியுள்ளார்கள். அங்குள்ள கழிவறை மற்றம் ஜன்னல் கதவுகளின் அசுத்தங்களால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது. மதிய உணவு உண்டால் வாந்தி வருகிறது. தண்ணீர் அருந்தினால் குமட்டுகிறது. எப்போதெல்லாம் அருவருப்பு மேலோங்கி குமட்டலும் வாந்தியும் ஏற்பட்டுவிடுகிறது. அப்பெண்மணிக்கு தினசரி மூன்று வேளை கிராப் ஆப்பிள் சாப்பிடுமாறு கொடுத்தனுப்பினோம். இரண்டு நாட்களிலேயே வாந்தி நின்றுவிட்டது. தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்ட பின் கடுமையான அருவருப்பு உணர்ச்சி குறைந்து, மறைந்தது.

பள்ளி மாணவி ஒருவர் சிறு பூச்சிகளைக் கண்டால், கரப்பான், பல்லி போன்றவற்றைக் கண்டால் அருவருத்து, உடல் புல்லரித்துப் போவார். அவரது சகோதரர் தற்செயலாக இது பற்றிக் கூறியதை கேட்ட நாங்கள் ஒரு மாத காலத்திற்கு கிராப் ஆப்பிள் மலர் மாத்திரை சாப்பிடுவதற்கு கொடுத்தனுப்பினோம். மாணவியின் சகோதரர் மறுமுறை சந்தித்த போது ஆச்சரியத்துடன் பாராட்ழனார். 'நீங்க கொடுத்த மருந்து அருமையான மருந்து சார்! ஒருமுறை மழைநாளில் விட்டுக்குள் ஒவ்வாமை போல் தடித்து தடிப்பாய் வந்து மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் நேற்று மழை பெய்ததைத் தொடர்ந்து தெரு விளக்கைச் சுற்றி மொய்த்த அம்மா எல்லோருமே சந்தோசப்பட்டார்கள்! ரொம்ப நன்றி டாக்டர்!' இது போன்ற எண்ணற்ற சிகிச்சை அனுபவங்களில் பாட்ச் மலர் மருந்துகள் வியக்கத்தக்க வகையில் குணமளிக்கின்றன.

சின்னஞ்சிறிய - அற்பமான பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தம் நபர்கள், அகத்தூய்மை பற்றிய அக்கறை இல்லாமல் புறத்தூய்மை குறித்து வருந்துவோர், சாதாரண மக்களின் தோற்றம் கண்டு மனக்கஷ்டத்திற்கு ஆளாகி, அதனால் அவர்களின் அழைப்பையும் அவர்களையும் மதிக்காத மனிதர்கள், அளவுக்கு அதிகமாக சுத்தம் கடைபிடிப்பவர்கள்....... இவர்கள் அனைவருக்குமே கிராப் ஆப்பிள் பயன்படும். கிராப் ஆப்பிள் மூலம் மற்றவர்களை மதிக்கக் கூடிய மனப்பான்மை, மனிதநேய அணுகுமுறை, தன் குறிகளைத் திருத்திக் கொள்ளும் மனநிலை போன்றவைகளைப் பெறமுடியும். தேவையற்ற அருவருப்பும், இரக்கமற்ற தன்மை, அனாவசிய ஆடம்பரங்களும் விலகி ஓடும். ஏனென்றால் மலர் மருந்துகள் முழு மனிதனையும் சுத்திகரிப்பவை. 

பாட்ச் மலர் மருந்துகள் - மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி



கட்டுரை ஆசிரியர்: Dr.V.ஆவுடேஸ்வரி,


பல்வேறு சமுதாய, பொருளாதார, அரசியல் காரணங்களாலும், பாரம்பரியம் மற்றும் வாழ்நிலை, சூழ்நிலைக் காரணங்களாலும் தனிமனித உளவியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செல்வவளம் நிறைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மனச் சோர்வு, குழப்பம், பதட்டம், மனநோய்கள் பெருகி வருகின்றன. காதல் சுதந்திரம் என்ற பெயரில் முதற்காதல், இரண்டாம் காதல், மூன்றாம் காதல்....... என்று தறிகெட்ட நிலை நிலவுகிறது. இருமனங்களின் சங்கம்மாய் காதல் அமையாததால், காதல் திருமணங்கள் அளவிற்கு விவாகரத்துகளும் சாதாரண நிகழ்வுகளாய் அங்கே காணப்படுகின்றன. மனஇயல் நிபுணர்கள் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே செல்கிறது.

சமுதாய அமைப்பும், கலாச்சாரமும் ஆரோக்கியமாக இருந்தால், சுற்றுச் சூழலும், உணவுகளும் ஆரோக்கியமாக இருந்தால் மக்கள் நலமும் சிறப்புற அமையும் மக்களின் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும் என்பது உண்மை.ஆரோக்கியம் என்பது பிறப்புரிமை (Birth Right)மனித குலத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், ஆரோக்கியம் அளிப்பதற்கும் எண்ணற்ற மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்து பலவழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். அவர்களில் ஹோமியோபதியைக் கண்டுபிடித்த டாக்டர்.ஹானிமன் அவர்களும் மலர்மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். மனிதனைப் பல உறுப்புகளின் சேர்க்கையாகப் பார்க்கும் ஆங்கில மருத்துவத்தின் எந்திரவியல் அணுகுமுறையிலிருந்து அவர்கள் மாறுபட்டனர். உடலும் மனமும் இணைந்த முழுமையாய் மனிதனை அணுகும் பார்வையை மருத்துவ உலகுக்கு வழங்கினர். 'மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்து சமநிலையில் இருந்தால் ஆரோக்கியம் ஏற்படும். சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் ஆரோக்கியம் கெடும் நோய் ஏற்படும்' என்ற புதிய பார்வையும், பரிணாம வளர்ச்சியும் ஹோமியோபதி & மலர் மருத்துவம் மூலம் மருத்துவ உலகத்திற்குக் கிடைத்தது

லண்டனைச் சேர்ந்த டாக்டர்.எட்வர்டு பாட்ச் M.B.B.S., M.R.C.S., F.R.C.P., D.P.H.,  அவர்களின் நீண்டகால ஆராய்ச்சிகளின் பயனாக உலகத்திற்கு அறிமுகமான அதிநவீனமான, புரட்சிகரமான இயற்கை முறை மனநல மருத்துவமே 'மலர் மருத்துவம்' டாக்டர். பாட்ச் அவர்கள் சீர் குலைந்த மனங்களைச் சீர்படுத்த 38 வித மலர் மருந்துகளை மானிட சமுதாயத்திற்கு வரப்பிரசாதமாக வழங்கியுள்ளார்.

பயங்களைப் போக்கும் மலர் மருந்துகள்



கட்டுரை ஆசிரியர்:டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்.சாத்தூர்.



உலகில் மனப்பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார்? பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பிரச்சனைகள் என்ற வலைப்பின்னலுக்குள்தான் வாழ்ந்து வருகின்றான். பிரச்சனைகளின் அழுத்தத்தால் மனம் பாதிக்கப்படுகின்றது. மனம் பாதிக்கப்படும்போது மனிதனின் உயிராற்றல் (VITAL FORCE) பாதிக்கப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, தற்காப்புத்திறன் குறைகிறது. நோய்கள் சூழ்கின்றன.

எனவே நோய்க்கு மட்டும் மருந்தளித்து சிகிச்சை செய்து பயனில்லை. நோயாளி என்ற மனிதருக்கு அவரது மனத்திற்கு சிகிச்சை தேவை. சீர்குலைந்த மனம் செம்மைப்படும்போது ஜீவசக்தியும் செம்மைப்படுகிறது. உடலும் புதுப்பிக்கப்படுகிறது. நோய்கள் நீங்குகின்றன. மனிதன் நலம் பெறுகிறான்.

மனக்குழப்பங்களையும் அதன்பின் விளைவுகளாக ஏற்பட்ட வியாதிகளையும் நீக்கும் உன்னத மருத்துவ குணம் கொண்டவை பாட்ச்மலர் மருந்துகள். மனித இயற்கைக்கு மாறான, எதிர்மறையான மனநிலைகளை, எண்ணங்களை மாற்றியமைத்து உள்ளத்தில் ஆக்கப்பூர்வமான ஆற்றலைப் பெருக்கச் செய்யும் வல்லமை மலர் மருந்துகளுக்கு உண்டு.

வயதுக்கேற்ப, வளர்ப்பிற்கேற்ப, வாழ்க்கை சூழலுக்கேற்ப மனிதர்களிடம் பயம்படிந்து விடுகிறது. எந்த சூழ்நிலையிலும், எது பற்றியும் பயமே கொள்ளாத, பயம் என்றால் என்னவென்றே அறியாத ஒருவரும் உலகில் இருக்க முடியாது ஒவ்வொருவரிடமும் பயம் உள்ளது. அளவும் தன்மையும் மாறுபடலாம். சில பயங்கள் அவசியமானவையாக நியாயமானவையாக அறிவுப்பூர்வமானவையாக இருக்கக்கூடும். பல பயங்கள் அவசியமற்றவை. நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்பவை. நமது பல்வேறு தோல்விகளுக்கு இந்த அநாவசியமான பயங்களே மூலக்காரணங்கள். இத்தகைய பயங்களால் மனச்சமநிலை பாதிக்கப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் பலவீனப்படுகிறான். பயம் காரணமாக பதட்டமும், அமைதியற்ற தன்மையும், மகிழ்ச்சியற்ற நிலையும் ஏற்படுகிறது. பயங்களைப் போக்குவதற்கு மலர் மருத்துவமே சிறந்தது.

பொதுவாக பயங்களை அகற்ற "மிமுலஸ்" என்ற மலர் மருந்து அற்புதமாக உதவுகிறது. நமது சமூக அமைப்பில் பெண்களுக்கு வெட்கமும் பயமும் தாய்ப்பாலோடு கலந்து ஊட்டப்படுகிறது. "நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்" என்றான் பாரதி. இங்கே இவை பெண்களின் அடிப்படைக் குணநலன்கள் என்று தவறாகக் கற்பிக்கப்படுவதால் பயம் என்ற நோய்க்கு பெண்கள் அதிகளவில் பலியாகின்றனர். சாதாரண பல்லி, கரப்பான்பூச்சியிலிருந்து துவங்கி பெண்களின் பயங்கள் வாழ்க்கையின் சகல அம்சங்கள் மீதும் பரவிக்கிடக்கின்றன. "மிமுலஸ்" மருந்து மூலம் பயங்களிலிருந்து பெண்கள் விடுபட்டு இயல்பான மனநிலையைப் பெறலாம்.

மேலும் பயந்த சுபாவம் உள்ள ஆண், பெண், இருபாலருக்கும் உதவக்கூடிய மிமுலஸ் இருட்டில் செல்ல பயம் பூட்டிய அறையைத் திறக்க பயம், தனிமையிலிருக்க பயம், தனிமையில் பயணம் செல்லப்பயம், புதியவர்களைக் கண்டால் பயம், கூட்டத்தைக் கண்டால் பயம், இறந்தவர்களைக் கண்டால் பயம், பேய் பிசாசு பயம், பலர் மத்தியில் பேசப்பயம், பயம் காரணமாகத் திக்கித்திக்கிப் பேசுதல், நோய்வந்துவிடும் என்ற பயம், வந்த நோய் முற்றி இறந்து விடுவோம் என்ற பயம், மனிதர்களைக் கண்டு பயம், மிருகங்களைக் பயம் (பாதுகாப்பான நிலையிலும்) திருடர்கள் பயம், எல்லாவற்றிலும் பயம் எதற்கெடுத்தாலும் பயம் என்று பயங்களின் இரும்புப்பிடிக்குள் சிக்கிக் கொள்பவர்களை வெளியேற்றி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் அரிய மருந்து "மிமுலஸ்".

இரண்டுமுறை கர்ப்பமாகி, முதல் முறை 7வது மாதமும், இரண்டாம் முறை 6வது மாதமும் கருச்சிதைவுக்கு ஆளான பெண் சிகிச்சைக்கு வந்தாள். ஹோமியோ மருந்துகள் அளிக்கப்பட்டன. மூன்றாவது முறையாக கருத்தரித்து (HABITUAL ABORTION)  வழக்கமான கருச்சிதைவுக்கு ஆளாகாமல் 7 மாதமும் கடந்து விட்டது. 8வது மாதத்தில் கருச்சிதைவு நேர்ந்துவிடும் என்று அவள் பயந்தாள். அவளது பயத்தைப்போக்கி சுகப்பிரசவத்திற்குத் துணை புரிந்த மருந்து "மிமுலஸ்".

அண்ணன் வெளிநாடு செல்லும்போது தம்பியிடம் கடை வியாபாரத்தை ஒப்படைத்துச் செல்கிறார். அன்றுமுதல் தம்பியின் மனநிலை பாதிக்கப்படுகிறது. தன்னால் கடை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாததால் பயமும் பதட்டமும் அவரை அலைக்கழித்தது. அவருக்கு "மிமுலஸ்" என்ற மருந்தும், "லார்ச்" என்ற மருந்தும் அளிக்கப்பட்டது. விரைவில் நலமடைந்து, வியாபாரத்தில் ஆர்வமும் அக்கரையும் காட்டி நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறார்.

சில பயங்கள் காரணங்களின்றி வரக்கூடும். இதற்குரிய மருந்து "ஆஸ்பென்" இத்தகைய காரணகாரியமற்ற பயம் இரவிலோ, பகலிலோ எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்திலும் ஏற்படலாம். திடீரென உள்ளத்தைப் பயம் ஆக்கிரமிக்கும். பதட்டம் ஏற்படுத்தும் சகஜத்தன்மைகள் கெடும். வியர்த்துப் பரபரத்து பயத்தின் ரேகைகள் படித்த தோற்றத்துடன் காணப்படும். இவர்களிடம் என்னவென்று விசாரித்தால் "என்னவென்று தெரியவில்லை. ஏதோ ஒரு மாதிரி (பயம்) ஏற்படுகிறது" என்பார்கள்.

இவர்களது பயங்களுக்கான அடிப்படைகளை நாமும் அறிய இயலாது. இவர்களாலும் எடுத்துச் சொல்ல இயலாது. இவர்களது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பயன்படும் மலர்மருந்து "ஆஸ்பென்".

நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டு மிகவும் பதட்டமடைந்து பின்னர் விடியும் வரை தூக்கமின்றி தவித்த இளைஞர் ஒருவர் வந்தார். தனக்கு ரத்த அழுத்தமோ, உடல்நோய்களோ, மனம் சார்ந்த வேறு பிரச்சனைகளோ இல்லை என்றும், ஆனாலும் கடந்த சில நாட்களாக நடு இரவில் பயஉணர்ச்சி ஆட்கொண்டு உடல் பலமே இல்லாததுபோல் காணப்படுகிறது. பாதுகாப்பற்ற உணர்வு உண்டாகிறது என்று கூறினார். அவரது அறையில் பல கடவுள் படங்கள் மாட்டப்பட்டன. இரவு உறங்கச் செல்லும்முன் மிகுந்த பக்தியுடன் கும்பிட்டு விபூதியிட்டுக்கொண்டு உறங்கச் செல்லத் துவங்கினார். கடவுள் நம்பிக்கை கொண்ட அவருக்கு சற்றே மன ஆறுதல் தென்பட்டாலும் நள்ளிரவில் காரணமின்றி வரும் பயம் நீங்கவில்லை. அவருக்கு சுமார் 3 வாரங்கள் "ஆஸ்பென்" மருந்தளித்தபின் முழு நலமடைந்தார். நிம்மதியான தூக்கம் அவரைத் தழுவிக்கொண்டது.

பொதுவாக பயங்களைப் போக்கப் பயன்படும் மருந்து "மிமுலஸ்" என்றாலும் அதீதமான பயங்களுக்கும், மிரட்சிக்கும், பீதியடைதலுக்கும் (EXTREME FEAR & PANIC) "ராக்ரோஸ்" என்ற மலர் மருந்தே ஏற்றது. மனவலிமையும் தைரியமும் நிறைந்த நபர்கள் கூட சில அதிர்ச்சியூட்டும் சூழ்நிலைகளில் பீதியடையத்தான் செய்வார்கள். ஆனால் இம்மனநிலை தற்காலிகமானதாக இல்லாமல் நீடித்தால் "ராக்ரோஸ்" சிறப்பாகப் பயன்படும்.

தீ விபத்தோ, வாகன விபத்தோ, திடீர் வெள்ளம், புயல் போன்ற வேறு விபத்துக்களோ நடந்த இடங்களில் உள்ளவர்களிடம் பீதியும் உச்சகட்ட அச்சங்களும் காணப்படும். இம்மனநிலை நம்மைச் செயலிழக்கச் செய்யும். சில தந்திச் செய்திகள் நமது சந்தோசங்களைப் பறித்து விடும். பெரும் அச்சம் கலந்த வேதனையை ஊற்றெடுக்கச் செய்து விடும்.

காது இரைச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தார் ஒரு மூதாட்டி. தொடர்ந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்செயலாக ஒருமுறை சில ஆண்டு முன் அவரது வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தினைப் பற்றியும் அவர் அதில் பட்டபாடு பற்றியும் அதன் பின்னரே காது இரைச்சல் வந்தது என்றும் தெரியப்படுத்தினார். அவருக்கு சில மாதகாலம் "ராக்ரோஸ்" மலர் மருந்தும் சேர்த்து அளிக்கப்பட்டதால் முழுநிவாரணம் பெற்றார்.

பயங்களைப் பற்றிப் பயம் வேண்டாம். மலர் மருந்துகள் நமது பயங்களைப் போக்கும். மனதில் உறுதியும் தெளிவும் பிறக்கச் செய்யும். 

மங்கையர் பிரச்சனைகள் தீர்க்கும் மலர் மருந்துகள்


கட்டுரை ஆசிரியர்:டாக்டர் வி.ஆவுடேஸ்வரி



"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்" என்று பாடினான் பாரதி.
"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கே
வேரில் பழுத்த பலா" என்று புதிய குரல் எழுப்பினார் பாரதிதாசன்.

பெண்ணை உயிருடன் நெருப்பில் வீழ்த்தும் சதி பழக்கத்திற்கு எதிராக ஆவேசமாகப் போராடினார் ராஜாராம்மோகன்ராய்.

பெண் சமத்துவத்துக்காகவும், பெண் சொத்துரிமைக்காகவும், விதவை மறுமணத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் தந்தை பெரியார். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெண்ணுரிமைக்குப் போராடிய ஆண்களே அதிகம்.

 பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த ஆண்களின் வரிசையில் டாக்டர்.ஹானிமன் அவர்களையும் டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 பெண்ணாக ஏன் பிறந்தோம் எனத் துயரப்படும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அமைந்துவிடுகின்றன. பூப்படைவதும் மாதாந்திரப் போக்கும், கர்ப்பமும், பிரசவித்தலும், மாதவிடாய் நிற்றலும் பெண்ணின் வாழ்வில் இயற்கையான நிகழ்வுப் போக்குகள் என்றாலும் அவை ஒவ்வொன்றையும் அவஸ்தையூட்டும் அனுபவங்களாக துயரமான மைல் கற்களாக கடந்து செல்ல வேண்டியுள்ளது.

 பெண்ணின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருக்கும் அனைத்தையும் தகர்ப்பதில் சமூக சீர்திருத்தவாதிகள் மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்களின் உடலியல், மனவியல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தடைகளை அகற்ற டாக்டர்.ஹானிமன் உலகுக்களித்த ஹோமியோபதி மருத்துவமும், டாக்டர்.எட்வர்டு பாட்ச் கண்டுபிடித்த மலர் மருத்துவமும் மட்டுமே பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

பெண்கள் பருவமடைந்த காலம் முதல் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள நாட்களிலும் பல சிரமங்களைக் கடக்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் 11, 12, 13 வயதுகளில் பருவ மலர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. அப்போதிருந்து ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு துவங்குவதற்கு ஒரு சில நாள் முன்னரே உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை PREMENSTRUAL SYNDROME என்றழைக்கின்றனர். இந்த நேரங்களில் மனச்சமநிலை சீர்குலைகிறது. அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன சந்தோசங்களும் காணாமல் போகும். கருமேகம் போல் ஒருவித மனச்சோர்வு வட்டமிடும். பலவிதக் கவலைகள் கிளர்ந்தெழும். தற்காலிகமான இந்தச் சோர்வுத் தாக்குதலை விரட்டி மனநிலையில் சமநிலை கொண்டுவர "மஸ்டார்டு" என்ற மலர் மருந்து உதவுகிறது.

பிறர் மீது எறிந்து விழுதலும், திடீரென புயல் போல் சீற்றத்தோடு வந்து போகும் கோபமும், நிதானமின்மையும் இருக்கும் பெண்களின் உளப்போராட்டங்களைத் தணித்து அமைதிப்படுத்த "இம்ப்பேஷன்ஸ்" என்ற மலர் மருந்து துணை புரியும். சில பெண்களுக்கு கோபம், எரிச்சல் அல்லது வலி போன்றவை சிறிதும் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு விசுவரூபம் எடுத்துவிடும். இத்தகைய நிலைமைக்கு ஆட்படும் பெண்கள் குழந்தைகளை அடித்தல், பொருட்களை உடைத்தல், மோசமாக நடந்து கொள்ளுதல், கூப்பாடு போடுதல் போன்ற செயல்களில் இறங்கி விடுவார்கள். இவர்களை "செர்ரிப்பழம்" என்ற மலர் மருந்து அமைதிப்படுத்தும், உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தும் திறனை மனதுக்கு வழங்கும்.

பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் பெண்களில் பலர் நிகழ்காலத்தைப் பற்றி எண்ணாமல், திட்டமிடாமல், செயல்படாமல் வருங்காலக் கனவுகளிலேயே மூழ்கிக்கிடப்பதுண்டு. இவர்களுக்குக் கனவுகளும், சினிமாக்களும், கற்பனைச் சித்திரங்களும், பாடல்களும் இனிக்கும். கல்வியும், முயற்சியும், உழைப்பும் கசக்கும். சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், பகட்டான வாலிபர்களையும் நினைவில் வைத்துக்கொண்டே - பகல் கனவில் லயித்துக் கொண்டே வாழ்க்கையின் வளர்ச்சிக்குரிய நேரங்களைப் பாழத்து வரும் பெண்களை எதார்த்த உலகிற்கு அழைத்து வரும் திறன் படைத்த மலர் மருந்து "கிளெமேட்டிஸ்".

எப்போதும் தன் தோற்றம், நிறம், அழகு, முகப்பொலிவு பற்றியே சில பெண்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். முகத்தில் பருக்களோ, சின்னஞ்சிறு நிறமாற்றமோ, புள்ளிகளோ, தேமலோ தென்பட்டால் இவர்கள் படும் வேதனைக்கு அளவில்லை. இவர்களின் மனநிலையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப் பயன்படும் மருந்து "கிராப் ஆப்பிள்" தன் அழகைக் கெடுக்கிறதே என்று அங்கலாய்க்கிற அருவருக்கிற விஷயங்கள் பருக்கள் என்றாலும் மருக்கள் என்றாலும் "கிராப் ஆப்பிள்" அவற்றையும் மறையச் செய்கிறது. மனமும் உடலும் ஒரே நேரத்தில் சுத்திகரிக்கப்படுகின்றது.

பொதுவாகப் பெண்களுக்கு அதிகம் பயன்படக்கூடிய மருந்து "வால்நட்" முதல் மாதவிலக்கு முதல் மாதவிலக்கு சுழற்சி முற்றுப்பெறும் காலம் வரை பல்வேறு கட்டங்களில் எல்லா பெண்களுக்கும் "வால்நட்" பயன்படும். பருவமடையும் போது உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஒருவித பதட்டம், அச்சம், குழப்பம் பீடிக்கிறது. ஒவ்வொரு மாதவிடாயின் போதும் மாதவிடாய்க்கு முன்பும், கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மனதிலும் அலை அலையாய் உணர்ச்சி மாற்றங்கள் நிகழ்கின்றன. மாதவிடாய் நிற்கும் (MENOPAUSE) காலத்தில் ஏற்படும் உடலியல் திருப்பங்களால் மனநிலைகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. அமைதி குலைகிறது. மணமானபின் பெற்றோரை பிரிந்து வளர்ந்த இல்லத்தைப் பிரிந்து செல்லும்போது ஏற்படும் கடுமையான துக்கம், கணவர் வீட்டின் புதிய சூழலுக்குத் தன்னைப் பொருத்திக் கொள்ள இயலாத சிரமம் அனைத்துக்கும் நிவாரணம் "வால்நட்". புதிய சூழ்நிலைகளையும் புதிய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை "வால்நட்" வழங்குகிறது. ஒவ்வொரு பெண்ணின் கைப்பையிலும் இருக்க வேண்டிய மலர் மருந்து "வால்நட்".

இவைதவிர இன்னும் பல மலர் மருந்துகள் பெண்களின் மனப்பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகின்றன. கவலைகளையும், துயரங்களையும் அடக்கி வைத்ததன் பின்விளைவுகளாக வந்த உடல்நல, மனநல பாதிப்புகளுக்கும், காதல் தோல்வியால் ஏற்படும் மனப்பாதிப்புகளுக்கும், உடலுறவு ஆர்வமே இல்லாததால் அல்லது உடலுறவு சம்பந்தமாக அருவருப்பு ஏற்படுவதால் அல்லது கணவர் மீது விவரிக்க இயலாத வெறுப்புணர்ச்சி ஏற்படுவதால் அன்றாடம் நிகழும் தாம்பத்திய வாழ்க்கைப் பாதிப்புகளுக்கும், தாய்மையடைந்த நிலையில் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் பயம், பதட்டங்கள், கற்பனைக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு மலர் மருந்துகள் உதவி புரியும். மேலும் கணவரிடமோ, குழந்தைகளிடமோ, அன்பாக நடக்க இயலாமை அல்லது அவர்கள் குறித்து சந்தேகம், அதீதக் கவலை கொள்ளுதல், மணமான பின்னரும் முன்பு பழகிய ஆணுடன் தொடர்பு கொள்ளுதல், அவரை மறக்க இயலாமையில் தவித்தல், குடும்பத்தை நிர்வகிக்க இயலுமா, குழந்தை வளர்க்க இயலுமா என்று தன்னம்பிக்கையற்று இருத்தல், சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அதிகமான பாலுணர்வுக் கிளர்ச்சிகளுக்கு ஆளாகி சுயஇன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், ஓரினக்காதலில் ஏற்படுதல், பல ஆண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற பல்வேறு மனரீதியான சிக்கல்களைத் தீர்க்க மலர் மருந்துகள் பேருதவி புரியும். செர்ரிப்பளம், ரெட்செஸ்ட்நட், ஹால்லி, வில்லோ, வால்நட், ஹனிசக்கிள், லார்ச் போன்ற மலர் மருந்துகள் மேற்கண்ட பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.

"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை" என்பது நூற்றுக்கு நூறு உண்மை. பண்டிகை நாட்கள் உட்பட எந்த நாளும் பெண்களுக்கு ஓய்வு இல்லை. விசேஷ நாட்களில் விருந்தினர்களுக்கும் சேர்த்து வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டிய பெண்கள் எளிதில் பலவீனம் அடைந்து விடுகின்றனர். மேலும் கணவருக்கோ, குடும்பத்தில் வேறு ஒருவருக்கோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவம் பார்க்கும்போது, இரவு பகல் விழித்து அவர்களைப் பராமரிப்பதால் பெண்கள் கடும்சோர்வையும், தூக்கமின்மை, பசியின்மை, ஜீரணக் கோளாறுகளையும் சந்திக்கின்றனர். இவர்களுக்கு வால்நட், ஆலிவ், ஹார்ன்பீம், சென்டாரி போன்ற மலர் மருந்துகள் நிச்சயமாக நிவாரணமளிக்கும்.

பிரச்சனைகளின் கால அளவு, தன்மையைப் பொறுத்து மலர் மருத்துவச் சிகிச்சை சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை தேவைப்படலாம். மங்கையரின் மனப்பிரச்சனைகள் தீர்க்க, மனநிலைகளில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்த சிறந்த மருத்துவம் மலர் மருத்துவம். 

மாற்று மருத்துவம் - தெரிந்து கொள்ளுங்கள்




மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ள நோய்களை முறியடிப்பதிலும், நோயற்ற உலகம் அமைப்பதிலும் உலகம் முழுவதும் சுமார் 150 மாற்று மருத்துவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இவற்றில் ஜெர்மன் ஹோமியோபதி, சீன அக்குப்பஞ்சர், லண்டன் மலர் மருத்துவம், இந்திய ஆயுர்வேதம், சித்தமருத்துவம், அரபு யுனானி மற்றும் இயற்கை, யோகா, மூலிகை மருத்துவங்கள் போன்றவை மிக முக்கியமானவை. மாற்று மருத்துவங்களின் அடிப்படைத் தத்துவங்களும், சிகிச்சை முறைகளும் ஆங்கில மருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. திட்டவட்டமான அனுபவச் சோதனைகளால் நிறுவப்பட்டவை. உலக நல நிறுவனத்தால் (W.H.O.)  அங்கீகரிக்கப்பட்டவை. மனித உடலிலுள்ள இயற்கையான உயிர்ச்சக்தி (VITAL FORCE) ஓட்டத்தில் உள்ள குறைபாடுகள், தடைகள் காரணமாக நோய்கள் உருவாகின்றன என்பது மாற்று மருத்துவ நோயியல் தத்துவம். நோயுற்ற மனிதனின் உடலை மட்டுமின்றி பசி, தாகம், கோபம், சந்தேகம், விருப்பு வெறுப்புகள், கனவுகள் போன்றவற்றையும், ஒவ்வொரு மனிதரிடமிருந்து பிரித்துக்காட்டும் தனித்தன்மைகளையும், உணர்வு நிலைகள், மனநிலைகள், குடும்பச் சூழ்நிலைகள் போன்றவற்றையும் தீர விசாரித்து முழுமையாக ஆய்வு செய்து (HOLISTIC APPROACH) மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக நோய் குணமாகும்போது மூன்றுவித நிகழ்வுகள் ஏற்படுகின்றன. 1.நோய்கள் உள்ளமுக்கப்படுதல் (SUPPRESSION) 2.தற்காலிக நிவாரணம் பெறுதல் (PALLIATION)  3.முழு நலம் அடைதல் (CURE). மாற்று மருத்துவங்களின் நோக்கம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து நிவாரணம் மட்டுமின்றி முழுநலத்தையும் அடைதல் என்பதை மையமாகக் கொண்டது.

 ஹோமியோபதி, அக்குப்பஞ்சர், மலர் மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவங்களில் சிறப்புத்தன்மைகளும் நன்மைகளும் ஏராளம். பக்கவிளைவுகள், பின்விளைவுகள் இல்லை. மாற்று மருத்தவ சிகிச்சையில் உள்ளவர்களை எளிதில் தொற்று நோய்கள் நெருங்காது. சயரோகம் (T.B.) புற்றுநோய் (CANCER) போன்ற பெருநோய்கள் ஏற்படாது. டெங்குசுரம், சிக்குன்குனியா போன்ற சவாலான நோய்களை ஹோமியோ, சித்தா, அக்குப்பஞ்சர் சிகிச்சைகள் மூலம் முழுமையாக நலப்படுத்தியதை நாடு அறியும். ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்தவே இயலாது என்று கூறும் பலவித தோல்நோய்கள், மனநோய்கள், ஆட்கொல்லி நோய்களை மாற்று மருத்துவங்கள் மூலம் பெருமளவு முன்னேற்றம் காணமுடியும். பெரும்பாலான அறுவைச் சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அனைத்திற்கும் மேலாக ஒப்பீட்டு ரீதியில் ஹோமியோ, அக்குப்பஞ்சர் போன்ற சிகிச்சைகளில் பணச்செலவு மிகக்குறைவு. 

அக்குப்பங்சர்....கேள்விகளும், பதில்களும்




அக்குப்பங்சர் சிகிச்சை முறை' என்பது என்ன?

அக்குப்பங்சர் என்பதை 'சிற்றூசி மருத்துவம்' அல்லது 'குத்தூசி மருத்துவம்' எனலாம். உலகின் மிகத்தொன்மையான மருத்துவக் கலைகளில் ஒன்று. சீனப்பாரம்பரிய மருத்துவமுறைகளில் சிறந்த ஒரு பகுதியாக பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வளர்ந்துள்ள ஆற்றல்மிகு சிகிச்சை முறை.

மருந்தளித்துக் குணப்படுத்தும் முறைகளில் தலைசிறந்த உன்னத முறையாக (Supreme system)ஹோமியோபதியும், மருந்தில்லாமல் குணப்படுத்தும் முறைகளில் தலைசிறந்த முதன்மைத் தகுதி வாய்ந்த முறையாக அக்குப்பங்சரும் திகழ்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக உலக மக்களிடம் மிகவும் பிரபலமடைந்து வரும் மருத்துவமுறை இது.

பட்டினியும் நோய்களும் மலிந்த சீன தேசத்தை இன்று சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியதில் அக்குப்பங்சரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தியா போன்ற நாடுகள் சீன வெற்றிப் பயணத்தின் பின்னணியைப் புரிந்து பின்பற்ற வேண்டும்.

அக்குப்பங்சரின் அடிப்படை பார்வை என்ன?

'கீ' (Qi) எனப்படும் ஆற்றலின் (Bodys Energy) சீரான இயக்கத்தை சார்ந்ததே ஆரோக்கியம் என்ற தத்துவ அடிப்படையில் அமைந்தது சீன அக்குப்பங்சர். ஒரு மனிதன் முழு நலத்தோடு இருக்கிறான் என்றால் அவனது உடல் முழுவதும் சக்தியோட்டம் சீராகப் பாய்கிறது என்று பொருள். நோய் ஏற்பட்டுள்ளது என்றால் சக்தி ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று பொருள். இதன் வெளிப்பாடாக வெவ்வேறு நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். மிக மெல்லிய ஊசிகள் மூலம் சிகிச்சை அளித்து சக்தி ஓட்டத்தைச் சீர்படுத்தி, நோய்களிலிருந்து விடுதலை பெறுதலே அக்குப்பங்சரின் குறிக்கோள் ஆகும்.

அக்குப்பங்சர் சிகிச்சையில் காயம், வலி, ரத்தக்கசிவு எதுவும் ஏற்படுமா?

ஊசி என்றதும் ஆங்கில மருத்துவமுறையில் பயன்படும் சிரஞ்சுடன் கூடிய ஊசிதான் எல்லோரின் நினைவுக்கும் முதலில் வரும் அல்லது மருத்துவமனைகளில் சிறு வயது முதல் ஊசி குத்தலால் பட்ட வலிகள் வரும். அதனால் பெரும்பாலோர் ஊசியை விரும்புவதில்லை. நமது சமூகத்தில் Needle Phobia  எனப்படும் ஊசி மீதான பயம் பலருக்கும் உள்ளது.

அக்குப்பங்சர் ஊசி இத்தகைய வலியை ஏற்படுத்தாது. மயிரிழை போன்ற மெல்லிய ஊசிகள் உடலில் செருகப்படும் போது ஒருவித உணர்வு மாற்றம் ஏற்படுவது இயற்கை. இதனால் காயமோ, ரத்தக் கசிவுகளோ பொதுவில் ஏற்படுவதில்லை. சிலருக்கு மெல்லியதொரு வலியுணர்வு, சிலருக்கு மெல்லிய அதிர்வு உணர்வு, சிலருக்கு குறுகுறு உணர்வு, சிலருக்கு லேசான வலி, சிலருக்கு லேசான மதமதப்பு இருக்கக்கூடும். ஆனால் இந்த உணர்வுகளால் தொடர் பாதிப்புகள் நேராது. மேலும் இவை நீடிக்கும் காலஅளவு மிகக் குறைவு. மேற்குறிப்பிட்ட உணர்வுகள் எல்லாமே அக்குப்பங்சர் சிகிச்சையின் ஆற்றல் வெளிப்படுவதன் அறிகுறிகளே.

மருந்து, மாத்திரைகள் உண்பது போல அக்குப்பங்சர் சிகிச்சை தினமும் செய்ய வேண்டுமா?

சில நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை துவக்கத்தில் சில நாட்கள் தினசரி தேவைப்படலாம். மற்ற பெரும்பாலோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் (3 நாள், 5 நாள், 1 வாரம், 2 வாரம் என்று) சிகிச்சை பெற்றாலே போதும்.

சிகிச்சையளிக்கும் போது ஆழ்நிலைக் காரணங்களின் தன்மைக்கேற்ப பிரதிவினைகள் ஏற்படும். சில நோய்கள் வெகு ஆழமானவை  (Deep seated) . பலமுறை சிகிச்சைக்குப் பின்னரே மெதுமெதுவாகக் குணமளிப்பு நிகழும். மற்ற பல நோய் நிலைகளில் ஒருசில சிகிச்சைகளிலேயே துரிதமான நல்விளைவுகள் ஏற்படும்.

அக்குப்பங்சர் சிகிச்சைக்கு முன் பின் சாப்பிடலாமா? உடற்பயிற்சி செய்யலாமா?

சாப்பிடாமல் வெறும் வயிற்றிலிருக்கும்போது சிலரது ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அப்போது அக்குப்பங்சர் சிகிச்சை அளித்தால் மயக்கம் ஏற்பட்டு விடும். எனவே சிகிச்சைக்கு சிறிது முன்பாக சிறிதளவேனும் சாப்பிட்டிருப்பது நல்லது. வயிறு புடைக்க உண்ணக்கூடாது.

அக்குப்பங்சர் சிகிச்சைக்குப் பின் சில மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் சிகிச்சைக்கு சற்று முன்னர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. அது சிகிச்சைக்கு இடையூறாக அமையும்.

எப்போதெல்லாம் அக்குப்பங்சர் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும்?

அதிக பலவீனமாயுள்ளபோது, பசி நேரம், மிகு உணர்ச்சியுள்ள நிலையில், உடலுறவு முடிந்த சிறிது நேரத்தில் அக்குப்பங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அக்குப்பங்சர் சிகிச்சையுடன்... ஹோமியோ, சித்தா, மூலிகை மருந்துகளைக் கூட இணைத்து உண்ணக்கூடாது, எந்த சந்தர்ப்பத்திலும் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்று சிலர் கூறுவது பற்றி...?

அக்குப்பங்சர் என்பது மருந்தில்லா மருத்துவம் என்பது உண்மையே. ஆனால் சீனப் பாரம்பரிய மருத்துவமுறைகளில் அதுவும் ஒன்று. தேவைக்கேற்ப எண்ணற்ற சீன மூலிகை மருந்துகளை அக்குப்பங்சருடன் இணைத்துச் சிகிச்சை அளிப்பது சீனாவின் பல்லாயிரமாண்டு மருத்துவ அனுபவம். இதனை அக்குப்பங்சரின் தனித்தன்மையை அழிக்கும் செயலாக கருதுவது அறிவுக்கு பொருத்தமற்றது. இத்தகைய கண்மூடித்தனமான கொள்கைகளால், விரும்பத்தகாத நடைமுறைகளால் பாதிக்கப்படுவது மக்களே.

அக்குப்பங்சரின் தாயகமான சீனாவில் தாயக மூலிகை மருந்துகளும் அக்குப்பங்சரும் இணைந்து வெற்றிகளைக் குவிப்பது போல, ஒருங்கிணைந்த (இயற்கை மருத்துவச்) சிகிச்சை தான் இன்றைய மற்றும் நாளைய மனிதர்களின் நவீன உடலியல், உளவியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும்.

எனவே அறிவியலுக்குப் புறம்பான, ஆபத்தான, அபத்தமான கருத்துக்கள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் மக்கள் விழிப்போடு புறக்கணிக்க வேண்டும்.

"ரத்தப்பரிசோதனை, சிறுநீர், மலப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற சோதனைகள் உண்மையான அக்குப்பங்சர் சிகிச்சைக்குத் தேவையில்லை" என்று ஒருசில அக்குப்பங்சர் மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயாளிகள் ஏற்கனவே பார்த்துள்ள ஆய்வு அறிக்கைகளைக் கண்ணால் பார்க்கக்கூட மறுப்பதும் சரியா?

மரபுமுறை அக்குப்பங்சர் மீதான அளவு கடந்த விருப்பத்தின்
காரணமாகவோ அல்லது பரிசோதனை முறைகள் எல்லாம் ஆங்கில மருத்துவத்தோடு மட்டுமே தொடர்புடையது என்ற அப்பாவித்தனம் காரணமாகவோ அல்லது தங்களை மற்ற (அக்குப்பங்சர்) மருத்துவர்களைவிட உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவோ அப்படி சிலர் கூறக்கூடும்.
அக்குப்பங்சர் சிகிச்சைக்கு இந்த ஆய்வுகள் மிகவும் அடிப்படையான தேவைகள் என்று கூற முடியாது என்றாலும் நோய்களின் தன்மைக்கேற்ப, மருத்துவருக்கு ஏற்படும் சில குழப்பங்களை, சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக, சிகிச்சையின் முன், பின் உடல் நிலைமை அறிவதற்காக, சிகிச்சையினால் கிடைத்து வரும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக பரிசோதனைகள் உதவும்; இவற்றை முற்றிலுமாய் நிராகரிப்பது அறிவுடைமையல்ல. அது நவீன சூழலுக்கேற்ப அக்குப்பங்சரை முன்னெடுத்துச் செல்ல உதவாது.


'ஒரு புள்ளி, ஒரு ஊசி, ஒரு நிமிடம்' என்ற சிகிச்சை முறைதான் சரியானது என்றும் Single Needle Therapy  எனப்படும் ஒற்றை ஊசிச் சிகிச்சைமுறை தவிர வேறு எந்த முறையில் சிகிச்சையளித்தாலும் அது அக்குப்பங்சர் அல்ல என்றும் சிலர் கூறுகிறார்களே?

அக்குப்பங்சர் நாடிப் பரிசோதனை பற்றி மருத்துவ உலகில் மாறுப்ட்ட கருத்துக்களும், விவாதங்களும், நடைமுறைகளும் உள்ளன. நாடிப்பரிசோதனை முறை சிகிச்சை மூலம் சிலபல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனினும் இதனைக் கற்றுத் தேர்வதும், தெளிவு பெறுவதும், வெற்றி காண்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

சீன நாட்டிலேயே நூற்றுக்கணக்கான வழிமுறைகளில் (Methodology) அக்குப்பங்சர் சிகிச்சையளிக்கப்படுவது உலகம் அறிந்த உண்மை. இம்முறைகளின் மூலம் விகிதாச்சார மாறுபாடுகளுடன் பயன்கள் கிடைப்பதால்தான் வெவ்வேறு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. அவை உலகெங்கும் பரவி வருகின்றன. ஒற்றை ஊசிமுறை தவிர, Multi Needle Therapy, Tens கருவி சிகிச்சை, Moxibution எனும் மாக்ஸா வைத்தியம், மின் தூண்டல் அக்குப்பங்சர் சிகிச்சை போன்ற முறைகளிலும் சிறப்பான உடல் நலப் பயன்கள் கிடைக்கின்றன என்பதை மக்கள் அனுபவம் வாயிலாக அறிந்துள்ளனர்.

மக்களின் சந்தேகம் என்னவென்றால் ஒரு புள்ளிச் சிகிச்சையைத் தொடர்ந்து நேரிலோ தொலைபேசியிலோ இஸ்லாமிய முறை பிரார்த்தனையும் இணைக்கப்படுவது ஏன் என்பதுதான். இவர்கள் எதைச் சிகிச்சை என நம்புகிறார்கள்? சீனாவின் எந்தப்பகுதியில் இத்தகைய அபத்தமான இறையியல் அக்குப்பங்சர் நடைமுறையில் உள்ளது.


'இந்திய அக்குப்பங்சரின் தந்தை' என்று Dr.பஸ்லூர் ரஹ்மான் அவர்களைச் சிலர் பெருமைப்படுத்திக் கூறுகிறார்களே?

டாக்டர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட டாக்டர். சித்திக் ஜமால், டாக்டர். பஸ்லூர் ரஹ்மான் இருவரும் ஆங்கில மருத்துவத் துறையில் பயின்று தகுதி பெற்றவர்கள். ஆயினும் அலோபதி மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டும், அக்குப்பங்சர் மருத்துவம் மீது கவனம் செலுத்தியும் மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். பின்னர் ஹோமியோ மருத்துவத்தையும் ஓரளவு கற்றுக் கொண்டு அதற்கு ஆதரவான பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர்.

பின்னர் "ஹோமியோபதியின் எதிரி ஹானிமனே!" என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தனர். ஹோமியோபதிக்கு எதிரான போலியான வலுவற்ற தர்க்கங்களை முன்வைத்து ஹோமியோபதியர்களை புண்படுத்தினர். ஹோமியோ மருத்துவத்தை சிறுமைப்படுத்தி எழுதி வந்தனர். அக்குப்பங்சரில் மிகச்சிறந்த சீர்திருத்தவாதிகளாக காட்டிக் கொண்ட இவர்களுக்கு மெல்ல மெல்ல ஊசி சிகிச்சை அக்குப்பங்சரில் அவசியமில்லை என ஞானோதயம் ஏற்படுகிறது. பின்னர் (தொட்டால் சுகம்) தொட்டாலே போதும் என்ற களமிறங்கினர். பின் தொடாமலே சுகம் என்றனர். பின் பிரார்த்தித்தால் சுகம் (இறையியல் மருத்துவம்) என்றனர். குர்ரானை தமிழ்படுத்தி வெளியிட்டு அக்குப்பங்சர் மருத்துவச் பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் முற்றிலுமாக மாற்றினர்.

இன்று டாக்டர். சித்திக் ஜமால் இல்லை. திடீரென்று அவர் கடும் நோய்வாய்ப்பட்டு மறைந்தார் என்று அவரது சீடர்களால் ரகசியமாக பேசப்பட்டது. அவரது மறைவு கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் டாக்டர். பஸ்லூர் ரஹ்மானை "இந்திய அக்குப்பங்சரின் தந்தை" என்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் முழுசக்தியையும் திரட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களில் ஒருசிலர் இடதுசாரி கருத்தோட்டம் உள்ளவர்களாக இருந்தும் ஆன்மீகத்தையும், மருத்துவத்தையும் குழப்பும் டாக்டர். பஸ்லூர் போன்றோரை உயர்த்திப் பிடிப்பது வருந்தத்தக்கது. அக்குப்பங்சர்... ஹோமியோபதி... தொட்டால் சுகம்... தொடாமலே சுகம்... பிரார்த்தித்தால் சுகம்... என எதிர்பரிணாம திசையில் செல்லும் பஸ்லூர் ரஹ்மானை எப்படி இந்திய அக்குப்பங்சரின் தந்தை என்று மாற்று மருத்துவத் துறையினரும் மக்களும் ஏற்க முடியும்?