புதிய பதிவுகள்

Monday, August 8, 2011

மங்கையர் பிரச்சனைகள் தீர்க்கும் மலர் மருந்துகள்


கட்டுரை ஆசிரியர்:டாக்டர் வி.ஆவுடேஸ்வரி



"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்" என்று பாடினான் பாரதி.
"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கே
வேரில் பழுத்த பலா" என்று புதிய குரல் எழுப்பினார் பாரதிதாசன்.

பெண்ணை உயிருடன் நெருப்பில் வீழ்த்தும் சதி பழக்கத்திற்கு எதிராக ஆவேசமாகப் போராடினார் ராஜாராம்மோகன்ராய்.

பெண் சமத்துவத்துக்காகவும், பெண் சொத்துரிமைக்காகவும், விதவை மறுமணத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் தந்தை பெரியார். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெண்ணுரிமைக்குப் போராடிய ஆண்களே அதிகம்.

 பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த ஆண்களின் வரிசையில் டாக்டர்.ஹானிமன் அவர்களையும் டாக்டர்.எட்வர்டு பாட்ச் அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 பெண்ணாக ஏன் பிறந்தோம் எனத் துயரப்படும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அமைந்துவிடுகின்றன. பூப்படைவதும் மாதாந்திரப் போக்கும், கர்ப்பமும், பிரசவித்தலும், மாதவிடாய் நிற்றலும் பெண்ணின் வாழ்வில் இயற்கையான நிகழ்வுப் போக்குகள் என்றாலும் அவை ஒவ்வொன்றையும் அவஸ்தையூட்டும் அனுபவங்களாக துயரமான மைல் கற்களாக கடந்து செல்ல வேண்டியுள்ளது.

 பெண்ணின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருக்கும் அனைத்தையும் தகர்ப்பதில் சமூக சீர்திருத்தவாதிகள் மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்களின் உடலியல், மனவியல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தடைகளை அகற்ற டாக்டர்.ஹானிமன் உலகுக்களித்த ஹோமியோபதி மருத்துவமும், டாக்டர்.எட்வர்டு பாட்ச் கண்டுபிடித்த மலர் மருத்துவமும் மட்டுமே பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

பெண்கள் பருவமடைந்த காலம் முதல் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள நாட்களிலும் பல சிரமங்களைக் கடக்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் 11, 12, 13 வயதுகளில் பருவ மலர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. அப்போதிருந்து ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு துவங்குவதற்கு ஒரு சில நாள் முன்னரே உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை PREMENSTRUAL SYNDROME என்றழைக்கின்றனர். இந்த நேரங்களில் மனச்சமநிலை சீர்குலைகிறது. அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன சந்தோசங்களும் காணாமல் போகும். கருமேகம் போல் ஒருவித மனச்சோர்வு வட்டமிடும். பலவிதக் கவலைகள் கிளர்ந்தெழும். தற்காலிகமான இந்தச் சோர்வுத் தாக்குதலை விரட்டி மனநிலையில் சமநிலை கொண்டுவர "மஸ்டார்டு" என்ற மலர் மருந்து உதவுகிறது.

பிறர் மீது எறிந்து விழுதலும், திடீரென புயல் போல் சீற்றத்தோடு வந்து போகும் கோபமும், நிதானமின்மையும் இருக்கும் பெண்களின் உளப்போராட்டங்களைத் தணித்து அமைதிப்படுத்த "இம்ப்பேஷன்ஸ்" என்ற மலர் மருந்து துணை புரியும். சில பெண்களுக்கு கோபம், எரிச்சல் அல்லது வலி போன்றவை சிறிதும் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு விசுவரூபம் எடுத்துவிடும். இத்தகைய நிலைமைக்கு ஆட்படும் பெண்கள் குழந்தைகளை அடித்தல், பொருட்களை உடைத்தல், மோசமாக நடந்து கொள்ளுதல், கூப்பாடு போடுதல் போன்ற செயல்களில் இறங்கி விடுவார்கள். இவர்களை "செர்ரிப்பழம்" என்ற மலர் மருந்து அமைதிப்படுத்தும், உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தும் திறனை மனதுக்கு வழங்கும்.

பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் பெண்களில் பலர் நிகழ்காலத்தைப் பற்றி எண்ணாமல், திட்டமிடாமல், செயல்படாமல் வருங்காலக் கனவுகளிலேயே மூழ்கிக்கிடப்பதுண்டு. இவர்களுக்குக் கனவுகளும், சினிமாக்களும், கற்பனைச் சித்திரங்களும், பாடல்களும் இனிக்கும். கல்வியும், முயற்சியும், உழைப்பும் கசக்கும். சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், பகட்டான வாலிபர்களையும் நினைவில் வைத்துக்கொண்டே - பகல் கனவில் லயித்துக் கொண்டே வாழ்க்கையின் வளர்ச்சிக்குரிய நேரங்களைப் பாழத்து வரும் பெண்களை எதார்த்த உலகிற்கு அழைத்து வரும் திறன் படைத்த மலர் மருந்து "கிளெமேட்டிஸ்".

எப்போதும் தன் தோற்றம், நிறம், அழகு, முகப்பொலிவு பற்றியே சில பெண்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். முகத்தில் பருக்களோ, சின்னஞ்சிறு நிறமாற்றமோ, புள்ளிகளோ, தேமலோ தென்பட்டால் இவர்கள் படும் வேதனைக்கு அளவில்லை. இவர்களின் மனநிலையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப் பயன்படும் மருந்து "கிராப் ஆப்பிள்" தன் அழகைக் கெடுக்கிறதே என்று அங்கலாய்க்கிற அருவருக்கிற விஷயங்கள் பருக்கள் என்றாலும் மருக்கள் என்றாலும் "கிராப் ஆப்பிள்" அவற்றையும் மறையச் செய்கிறது. மனமும் உடலும் ஒரே நேரத்தில் சுத்திகரிக்கப்படுகின்றது.

பொதுவாகப் பெண்களுக்கு அதிகம் பயன்படக்கூடிய மருந்து "வால்நட்" முதல் மாதவிலக்கு முதல் மாதவிலக்கு சுழற்சி முற்றுப்பெறும் காலம் வரை பல்வேறு கட்டங்களில் எல்லா பெண்களுக்கும் "வால்நட்" பயன்படும். பருவமடையும் போது உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஒருவித பதட்டம், அச்சம், குழப்பம் பீடிக்கிறது. ஒவ்வொரு மாதவிடாயின் போதும் மாதவிடாய்க்கு முன்பும், கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மனதிலும் அலை அலையாய் உணர்ச்சி மாற்றங்கள் நிகழ்கின்றன. மாதவிடாய் நிற்கும் (MENOPAUSE) காலத்தில் ஏற்படும் உடலியல் திருப்பங்களால் மனநிலைகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. அமைதி குலைகிறது. மணமானபின் பெற்றோரை பிரிந்து வளர்ந்த இல்லத்தைப் பிரிந்து செல்லும்போது ஏற்படும் கடுமையான துக்கம், கணவர் வீட்டின் புதிய சூழலுக்குத் தன்னைப் பொருத்திக் கொள்ள இயலாத சிரமம் அனைத்துக்கும் நிவாரணம் "வால்நட்". புதிய சூழ்நிலைகளையும் புதிய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை "வால்நட்" வழங்குகிறது. ஒவ்வொரு பெண்ணின் கைப்பையிலும் இருக்க வேண்டிய மலர் மருந்து "வால்நட்".

இவைதவிர இன்னும் பல மலர் மருந்துகள் பெண்களின் மனப்பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகின்றன. கவலைகளையும், துயரங்களையும் அடக்கி வைத்ததன் பின்விளைவுகளாக வந்த உடல்நல, மனநல பாதிப்புகளுக்கும், காதல் தோல்வியால் ஏற்படும் மனப்பாதிப்புகளுக்கும், உடலுறவு ஆர்வமே இல்லாததால் அல்லது உடலுறவு சம்பந்தமாக அருவருப்பு ஏற்படுவதால் அல்லது கணவர் மீது விவரிக்க இயலாத வெறுப்புணர்ச்சி ஏற்படுவதால் அன்றாடம் நிகழும் தாம்பத்திய வாழ்க்கைப் பாதிப்புகளுக்கும், தாய்மையடைந்த நிலையில் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் பயம், பதட்டங்கள், கற்பனைக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு மலர் மருந்துகள் உதவி புரியும். மேலும் கணவரிடமோ, குழந்தைகளிடமோ, அன்பாக நடக்க இயலாமை அல்லது அவர்கள் குறித்து சந்தேகம், அதீதக் கவலை கொள்ளுதல், மணமான பின்னரும் முன்பு பழகிய ஆணுடன் தொடர்பு கொள்ளுதல், அவரை மறக்க இயலாமையில் தவித்தல், குடும்பத்தை நிர்வகிக்க இயலுமா, குழந்தை வளர்க்க இயலுமா என்று தன்னம்பிக்கையற்று இருத்தல், சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அதிகமான பாலுணர்வுக் கிளர்ச்சிகளுக்கு ஆளாகி சுயஇன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், ஓரினக்காதலில் ஏற்படுதல், பல ஆண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற பல்வேறு மனரீதியான சிக்கல்களைத் தீர்க்க மலர் மருந்துகள் பேருதவி புரியும். செர்ரிப்பளம், ரெட்செஸ்ட்நட், ஹால்லி, வில்லோ, வால்நட், ஹனிசக்கிள், லார்ச் போன்ற மலர் மருந்துகள் மேற்கண்ட பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.

"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை" என்பது நூற்றுக்கு நூறு உண்மை. பண்டிகை நாட்கள் உட்பட எந்த நாளும் பெண்களுக்கு ஓய்வு இல்லை. விசேஷ நாட்களில் விருந்தினர்களுக்கும் சேர்த்து வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டிய பெண்கள் எளிதில் பலவீனம் அடைந்து விடுகின்றனர். மேலும் கணவருக்கோ, குடும்பத்தில் வேறு ஒருவருக்கோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவம் பார்க்கும்போது, இரவு பகல் விழித்து அவர்களைப் பராமரிப்பதால் பெண்கள் கடும்சோர்வையும், தூக்கமின்மை, பசியின்மை, ஜீரணக் கோளாறுகளையும் சந்திக்கின்றனர். இவர்களுக்கு வால்நட், ஆலிவ், ஹார்ன்பீம், சென்டாரி போன்ற மலர் மருந்துகள் நிச்சயமாக நிவாரணமளிக்கும்.

பிரச்சனைகளின் கால அளவு, தன்மையைப் பொறுத்து மலர் மருத்துவச் சிகிச்சை சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை தேவைப்படலாம். மங்கையரின் மனப்பிரச்சனைகள் தீர்க்க, மனநிலைகளில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்த சிறந்த மருத்துவம் மலர் மருத்துவம். 

No comments:

Post a Comment