புதிய பதிவுகள்

Wednesday, October 5, 2011

வலிப்பு



வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு  வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.
அறிகுறிகள்
  • உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
  • நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
  • முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
  • சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
முதலுதவி
  • பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
  • நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
  • எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
  • மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
  • மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
  • பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மயக்கம் ஏற்படுதல்



மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
  • தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
  • சோர்வு
  • வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
  • தோல் வெளுத்துக் காணப்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது
  • முன்புறமாக சாய வேண்டும்
  • தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக்  கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
  • பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை  உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
  • இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
  • குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால்,   பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச்சிறந்தது.

மூச்சுத்திணறல்



மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.
பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி



  • காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
  • இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
  • ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்
  • வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
  • இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள்
  • காயத்தின் மீது வீக்கம்.
  • காயம் சிவந்து காணப்படுதல்.
  • வலி.
  • காய்ச்சல்.
  • காயத்தில் சீழ்பிடித்தல்.

அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்



  • முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
  • முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
  • அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
  • பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
  • முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
  • அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
  • பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
  • பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலிதவிப் பெட்டி



அலுவலகம், விடு, தொழிற்சாலை, பள்ளிக்கூடம் என எல்லா இடங்களிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. வீட்டிலுள்ள டப்பாவையோ சிறிய அட்டைப் பெட்டியையோகூட இதற்குப் பயன்படுத்தலாம். முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை வருமாறு:
  • சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் - பல அளவுகளில்
  • பேண்டேஜ் துணி ரோல்கள்
  • ஒட்டும் டேப்புகள்
  • முக்கோண, மற்றும் ரோலர் பேண்டெஜ்கள்
  • பஞ்சு (1 ரோல்)
  • பேண்ட் எய்ட்- பிளாஸ்டர்
  • கத்திரிக்கோல்
  • சிறியடார்ச்


  • லேடெக்ஸ் கையுறைகள் (2 ஜோடிகள்)
  • சிறிய கிடுக்கிகள்
  • ஊசி
  • ஈரப்பதம் கொண்ட டவல்கள், சுத்தமான, உலர்ந்த துணிகளின் துண்டுகள்
  • ஆன்ட்டி செப்டிக் (சவ்லான், டெட்டால்)
  • தெர்மாமீட்ட்ர்
  • பெட்ரோலியம் ஜெல்லி ட்யூப்
  • ஊக்குகள் – பல அளவுகளில்
  • சுத்தப்படுத்தும் கரைசல் அல்லது சோப்
மருந்துகள் (டாக்டரின் பரிந்துரை தேவைப்படாதவை)
  • ஆஸ்பிரின் அல்லது பாரசட்டமால் வலி நிவாரணிகள்
  • வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்து
  • பூச்சிக்கடி, தேனீக்கள் கொட்டுதல் ஆகியவற்றுக்கான ஆண்டிஹிச்டமீன் க்ரீம்.
  • ஆண்டாசிட் (வயிற்றுப் போக்குக்கு)
  • லக்ஸேட்டிவ்


எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் முதலுதவிப் பெட்டியை வைத்திருங்கள். மருந்துகள் காலாவதியானதும் மாற்றிவிடுங்கள்.

முதல் உதவி -- நச்சுப்பொருட்கள்



நச்சுப் பொருட்கள் திட,திரவ அல்லது வாயுப் பொருளாக இருக்கலாம். அவை அதிக அளவில் உடலில் சென்று கலந்து விட்டால் உடல் நலனுக்கு பாதிப்பையோ உயிரிழப்பையோ ஏற்படுத்திவிடும். கீழ்க்கண்ட மூன்று வழிகளில் அவை உடலுக்குள் நுழைகின்றன.
  • நுரையீரல்கள் மூலம்
  • தோல் / சருமத்தின் மூலம்
  • வாய் வழியாக
நுரையீரல்கள் வழியாக
நுரையீரல்கள் வழியாக நச்சுக்கள் நுழைவது பற்றி 'சுவாசித்தல்' என்ற தலைப்பின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாய் மற்றும் சருமத்தின் வழியாக உடலுக்குள் நச்சுகள் எதேச்சையாகவோ அல்லது வேண்டுமென்றோ நுழைவது குறித்து காண்போம். குறிப்பிட்ட சிலவகை வேளாண் மற்றும் தோட்டக்கலை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது உருவாகும் நச்சுகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான நச்சுப் புகுதல் தொடர்பான நிகழ்வுகள் எதேச்சையாக நடக்கக்கூடியவையே. இப்பாதிப்புகளுக்கு எதிரான அறிவார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம் ஆகும்.
சில முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்:
  • மாத்திரைகள் மற்றும் மருந்துகளைக் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் வைக்கக்கூடாது.17.PNG கைக்கு எட்டாத உயரத்தில் பூட்டப்பட்ட அலமாரிகளில் வைக்கவும் (எ-கா: பீரோ, அலமாரிகளுக்கு மேல்).
  • ஒருபோதும் மாத்திரை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காதீர்கள். அவை தரம் கெட்டுவிடும். மருத்துவ சிகிச்சை முடிந்த பின் மீதமுள்ள மருந்து மாத்திரைகளை அவற்றை வாங்கினவர்களிடம் திரும்பக் கொடுத்துவிடுங்கள் ( மருந்துக் கடை அல்லது மருத்துவரிடம் ) அல்லது கழிப்பறையில் போட்டு தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்துங்கள்.
  • ஒருபோதும் இருட்டில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது அல்லது கொடுக்கும் போது என்ன மாத்திரை என லேபிலைப் படிக்கவும்.
  • எலுமிச்சை பழ பானங்கள், குளிர் பானங்கள் அல்லது பிற பானங்கள் உள்ள பாட்டில்களில் கெமிக்கல்,மருந்து உள்ளிட்ட நச்சு திரவங்களை ஒருபோதும் ஊற்றி வைக்காதீர்கள். பிள்ளைகள் அவற்றைத் தவறாக அறிந்துகொண்டு அவற்றைக் குடித்துவிடும்.
  • வீடு துப்புறவு செய்ய பயன்படுத்தும் டிடெர்ஜென்ட், ப்ளீச்சிங் பவுடர்,கெமிக்கல் உள்ளிட்டவைகளை ஒருபோதும் கை/பாத்திரம் கழுவும் சிங்க் தொட்டிகளுக்குக் கீழே வைக்காதீர்கள். தவழும் குழந்தைகள் அவற்றை தட்டி விட்டோ அல்லது கீழே தள்ளியோ விடுவர். ( வெளுப்பான் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துவிட்டால் அவை கழிவறையை மிக நன்றாக சுத்தம் செய்யும் என்று எண்ண வேண்டாம். மாறாக அவை நச்சுவாயுவினை உற்பத்திசெய்யும். அந்நச்சுவாயுவினை நுகர்ந்தால் அது உடல் நலனுக்கு நல்லதல்ல.)
  • ஒருபோதும் மிக அதிகமான உப்புக்கரைசலைக் கொடுக்காதீர்கள்.18.PNG
  • விபத்துக்குள்ளானவர் சுயநினைவின்றியும் மற்றும் வாயில் ஏதேனும் பாதிப்புடனும் இருந்தால், அவருக்கு ஒருபோதும் எந்த ஒரு பொருளையும் வாய் வழியாகக் கொடுக்காதீர்கள்.
  • விபத்துக்குள்ளானவர் சுயநினைவின்றி இருந்தால் எந்த ஒரு பொருளையும் வாய் வழியாக கொடுக்க முயற்சிக்கக் கூட வேண்டாம்.
  • பெட்ரோலியப்பொருட்களைக் குடித்தவர் அதை வாந்தி பண்ணும்வரை ஒருபோதும் காத்திருக்காதீர்கள்.உடனே அவரி மீளுயிர்ப்பு நிலைக்குக் (Recovery Position) கொண்டுசெல்லவும். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.
  • மது அருந்தி இருக்கும்போது எவ்வித மாத்திரைகளையும் குறிப்பாக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்காதீர். மதுவுடன் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மரணத்தையோ அல்லது தீவிர உபாதைகளையோ விளைவிக்கும்.

பொதுவான நச்சுகள்
வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ளும் சில பொதுவான நச்சுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அவை
  • சிலவகை விஷத்தன்மை கொண்ட பழங்கள் மற்றும் கொட்டைகள்.
  • பூஞ்சைகள் : விஷ/நச்சுக்காளான்கள்
  • அழுகிய உணவுப்பண்டங்கள்
  • சக்திவாய்ந்த வேதிப்பொருட்கள் : வெண்மெழுகு (பாரஃபின்), பெட்ரோலிய வெளுப்பான்கள், களைக்கொல்லிகள், வேதிஉரப்பொருட்கள்
  • மருந்துமாத்திரைகள்: ஆஸ்பிரின், தூக்கமாத்திரைகள், உளத்தமைதியாக்கிகள், இரும்பு சத்து மாத்திரைகள்
  • விலங்குகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் விஷ மருந்துகள் : எலிப்பாசானம்
  • மது
  • பச்சை நிறம் கொண்ட உருளைக்கிழங்குகள் : (பச்சை உருளைக்கிழங்குகள் எவ்வளவு ஆபத்தானவை என்ற விசயம் பொதுவாக பலருக்கும் தெரிவதில்லை. அவற்றை உண்பதால் அடி வயிற்றில் வலி , வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும்கூட ஏற்படும். அதன் பின்பு தடுமாற்றமும் நிலைகுலைவும் ஏற்படலாம்.

பொதுவான சிகிச்சை
விபத்துக்குள்ளானவர் சுயநினைவுடனோ அல்லது சுயநினைவிழந்தோ இருக்கலாம். அவர் சுயநினைவுடன் இருந்தால் நீங்கள் கொடுக்கும் சிகிச்சைக்கு கொஞ்சம் உதவியாக இருக்கலாம்.
அ. விபத்துக்குள்ளானவர் சுயநினைவுடன் இருக்கும்போது என்ன பொருளை விழுங்கினார், எந்த அளவு விழுங்கினார் மற்றும் எப்போது விழுங்கினார் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆ. விபத்துக்குள்ளானவர் அருகில் மாத்திரைகள், காலிபாட்டில்கள் அல்லது மருந்து அட்டைகள்/பெட்டிகள் எவையேனும் இருந்தால், அவற்றை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும். இவை எந்த வகையான நச்சு விழுங்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிய உதவும். இ. விபத்துக்குள்ளானவரின் வாய் வெந்தபடியோ,கொப்பளங்களுடனோ அல்லது இதர பாதிப்புகளுடன் இருக்கிறதா என வாயினைப் பரிசோதிக்கவும். அவ்வாறு இருந்து, அதே சமயம் அவரால் விழுங்கமுடியும் என்ற நிலையில் அவரால் குடிக்கமுடிந்த அளவு பால் அல்லது தண்ணீரைக் கொடுங்கள்.
ஈ. விபத்துக்குள்ளானவரை அவசியம் வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். வாந்தி எடுக்கும் பொழுது வாந்தியை சிறு கிண்ணம் அல்லது பாலித்தீன் பையிலோ சேகரித்து அவற்றை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும். இவை எந்த வகையான நச்சு விழுங்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிய உதவும்.
உ. விபத்துக்குள்ளானவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவும். விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தோ அல்லது இழந்து கொண்டிருப்பவராக இருக்கும் பொழுது……….

  • சுவாசத்தை சரிபார்க்கவும். சுவாசம் நின்றுபோயிருந்தால். கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையை ஆரம்பிக்கவும். ஆனால் விபத்துக்குள்ளானவரின் வாய் மற்றும் உதடுகள் வெந்து / எரிந்து இருந்தால் இம்முறையினைப் பயன்படுத்தாமல் செயற்கை சுவாசம் அளிக்கவும்.
  • விபத்துக்குள்ளானவர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருந்தால், கால்களை மேலே உயர்த்திய வண்ணம் அவரை மீளும் நிலையில் வைக்கவும், அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள். (விபத்துக்குள்ளானவர் குழந்தையாக இருந்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது குழந்தையின் தலைப்பகுதி கீழே இருக்கும் வண்ணம் உங்கள் முட்டிகளின்மேல் வைத்துக்கொள்ளவும் )
  • விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தைத் தொடர்ந்து கவனியுங்கள். பெரும்பாலான நச்சுகள் விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தைப் பாதிக்கலாம்.
  • விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லவும்.
  • விபத்துக்குள்ளானவரைக் குளிர்ச்சியாக வைக்கவும். ஈரத் துணியினை நெற்றியில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்சியினை கழுத்து,முதுகுத்தண்டு மற்றும் உடம்பில் வைக்கவும்.
  • விபத்துக்குள்ளானவரால் எவ்வளவு குளிர்ந்த நீர்/பானம் குடிக்கமுடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீரைக் குடிக்கவைக்கவும்.
  • உடலில் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுகிறதா என கண்காணியுங்கள்.
  • விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தால், சுவாசத்தை சரிபார்க்கவும் மற்றும் அவரை அந்நிலையிலிருந்து மீளும் நிலையில் வைக்கவும். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்
  • பூச்சி/விஷ மருந்து பாட்டிலைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஏனெனில் பாட்டில்களில் சிகிச்சை குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.அது மருத்துவரின் சிகிச்சைக்கும் உதவும்.
    19.PNG

தோல்/சருமத்தின் மூலம் நச்சு புகுதல்:
தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் பெரும்பான்மையானவற்றில், (குறிப்பாக தோட்ட ஆட்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்துபவை) வீரியம் மிக்க வேதிப்பொருட்கள் (உதரணம்:மாலதியான்) நிறைய இருக்கின்றன.அவற்றைப் பயன்படுத்தும்போது சருமத்தின் வழியே உடலுக்குள் நுழைந்து அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
அறிகுறிகள்:
  • நடுக்கம், உடல் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுதல்
  • விபத்துக்குள்ளானவர் படிப்படியாக சுயநினைவை இழத்தல்.

பராமரிப்பு
  • நச்சுப்பொருட்களால் பாதிக்கப்பட்ட சருமப் பகுதியை குளிர்ந்த நீரைக்கொண்டு நன்கு கழுவவும்.
  • நச்சு/வேதிப்பொருளால் பாதிக்கப்பட்ட உங்கள் உடையினைக் கழற்றும் பொழுது, உடம்பில் அவை படாதவாறு கவனமாகக் கழற்றவும்.
  • விபத்துக்குள்ளானதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யுங்கள். அவரை கீழே படுக்கவையுங்கள் மற்றும் அசைவின்றி அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள்.
  • விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லவும்.
  • விபத்துக்குள்ளானவரைக் குளிர்ச்சியாக வைக்கவும். ஈரத் துணியினை நெற்றியில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்சியினை கழுத்து,முதுகுத்தண்டு மற்றும் உடம்பில் வைக்கவும்.
  • விபத்துக்குள்ளானவரால் எவ்வளவு குளிர்ந்த நீர்/பானம் குடிக்கமுடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீரைக் குடிக்கவைக்கவும்.
  • உடலில் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுகிறதா என கண்காணியுங்கள்.
  • விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தால், சுவாசத்தை சரிபார்க்கவும் மற்றும் அவரை அந்நிலையிலிருந்து மீளும் நிலையில் வைக்கவும். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்
  • பூச்சி/விஷ மருந்து பாட்டிலைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஏனெனில் பாட்டில்களில் சிகிச்சை குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.அது மருத்துவரின் சிகிச்சைக்கும் உதவும்.